திருவள்ளூர் அருகே டிரைவர் வெட்டிக்கொலை
திருவள்ளூர் அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பெரியபாளையம்,
திருவள்ளூரை அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது புதுப்பட்டு கிராமம். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 37). டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் இதே கிராமத்தை சேர்ந்த பிரியங்கா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சசிதரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நாகராஜ் அதே ஊரை சேர்ந்த ஒருவரது வீட்டின் கதவை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தட்டியதாக தெரிகிறது.
அப்போது வீட்டில் அந்த நபரின் மனைவி மட்டும் இருந்தார். இதனால் நாகராஜுக்கும் அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கடைவீதிக்கு சென்ற நாகராஜ் வீடு திரும்பவில்லை.
நாகராஜ் வெட்டுக்காயங்களுடன் புதுப்பட்டு கூட்டு சாலையில் இறந்து கிடப்பதாக பிரியங்காவுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு பிரியங்கா விரைந்து சென்றார். கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த நாகராஜ் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து மப்பேடு போலீஸ் நிலையத்தில் பிரியங்கா புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதத்தால் இந்த கொலை நடந்ததா? அல்லது கள்ளத்தொடர்பு பிரச்சினையால் கொலை நடந்ததா? கொடுக்கல், வாங்கல் பிரச்சனையால் கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story