செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு எதிரொலி: குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு


செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு எதிரொலி: குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2020 5:12 AM IST (Updated: 26 Nov 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொலியாக, குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

பூந்தமல்லி, 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று காலை 7 மதகுகளின் வழியாக முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மாலையில் கூடுதலாக 3 மதகுகள் உள்பட மொத்தம் 10 மதகுகள் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மேலும் படிப்படியாக நீர் வெளியேற்றப்பட உள்ளது.

இந்த நீரானது மதகுகளின் வழியாக குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையைக் கடந்து வழுதலம்பேடு, திருநீர்மலை, திருமுடிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலந்துவிடும். தற்போது குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து உபரி நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதால் அந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனால் நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், அமரம்பேடு, சோமங்கலம், காட்டரம்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த கிராமங்களில் இருந்து சென்னைக்கும், அங்கிருந்து கிராமங்களுக்கும் வேலைக்கு சென்றவர்கள் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்படும் வரை அங்குள்ள சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. இதன் காரணமாக போலீசார் சாலைகளில் தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் அதனை பார்க்க வாகனங்களில் சென்ற பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்துமீறி நீர் செல்லும் பொதுமக்களை அப்புறப்படுத்தும் விதமாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் இருந்து அடிக்கடி ஒலி எழுப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

Next Story