திருவாரூரில், நிவர் புயல் எதிரொலி: இடைவிடாது பெய்த மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர் - கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவாரூரில் நிவர் புயல் எதிரொலியாக நேற்று இடைவிடாது மழை பெய்தது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூர்,
நிவர் புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்ததால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. மழை வெள்ள தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மட்டும் பணியில் இருந்தனர். திருவாரூர் நகரில் வங்கிகளும், பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் லாரி, வேன், கார் போன்ற வாகனங்களும் ஓடவில்லை. லாரிகள் அனைத்தும் பழைய தஞ்சை சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவசர தேவையை கருத்தில் கொண்டு ஓட்டல், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் திறந்து இருந்தன. ஆனால் மக்கள் நடமாட்டமின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
இடைவிடாது மழை பெய்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். எந்த நேரமும் போக்குவரத்து மிகுதியாக காணப்படும் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.
கனமழை எச்சரிக்கையாக ஆறுகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஆறுகளில் விவசாய பாசனத்துக்கு தேவையான மிதமான அளவு தண்ணீர் மட்டுமே செல்கிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், அரித்துவாரமங்கலம், ஆவூர், ஆலங்குடி, கோவிந்தகுடி, இனாம்கிளியூர், நல்லூர் உள்ளிட்ட கிராமங்களிலும் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று மாலை வரை நீடித்தது. கிராம பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாயினர்.
வலங்கைமான் பகுதிக்கு வெட்டாறு மழைநீர் வடிகாலாக உள்ளது. கன மழை பெய்யும் பட்சத்தில் மழைநீர் குடியிருப்புகளை சூழும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
நன்னிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடைவிடாது பெய்த மழை காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
நன்னிலம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்னதானபுரம், பாவட்டக்குடி, கொல்லாபுரம், திருமெய்ச்சூர், பனங்குடி உள்ளிட்ட 79 இடங்களில் புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மையங்களில் மழை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களை சேர்ந்த 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் எதிரொலியாக திருத்துறைப்பூண்டியில் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள் என 17 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 1,700 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் மருத்துவ வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் நேற்று மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான கடைகளை தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
திருத்துறைப்பூண்டியில் புயல் மற்றும் மழையின் தாக்கம் அதிகரித்தால் அதை சமாளிக்க 500 மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் புயல் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. திருத்துறைப்பூண்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு பிறகு மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மன்னார்குடியில் பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. விளம்பர பேனர்களை அகற்றும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த மரங்களின் கிளைகளை அகற்றினர். பஸ் போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து இன்றி மன்னார்குடி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
முத்துப்பேட்டை பகுதியில் நிவர் புயல் காரணமாக நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர கிராமங்களான ஜாம்புவானோடை, தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு, விளாங்காடு, கரையாங்காடு, கற்பகநாதற்குளம் ஆகிய இடங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆங்காங்கே அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கி உள்ளனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதியான தெற்குகாடு, மருதங்காவெளி, கோவிலூர் பைபாஸ், பேட்டை, புதுக்கோட்டகம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக பேனர்கள் அகற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அதிகாரி தேவராஜ், மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.
கோட்டூர் ஒன்றியத்தில் நிவர் புயலின் தாக்கத்தால் நேற்று சாரல் மழை வெகுநேரம் நீடித்தது. கோட்டூர், பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, களப்பால், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட 49 ஊராட்சிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள், கோவில்களில் 101 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 9,149 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய ஆணையர் சாந்தி ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று முகாமில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு, பொதுமக்களை அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story