மணமேல்குடியில், கடல் உள்வாங்கியதால் பரபரப்பு


மணமேல்குடியில், கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Nov 2020 3:30 AM IST (Updated: 26 Nov 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடியில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணமேல்குடி,

‘நிவர்’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி உள்பட கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மணமேல்குடி அருகே நேற்று கடல் திடீரென 100 மீட்டருக்கு உள்வாங்கியது. இது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மீனவர்கள் சிலர் கூறுகையில், பொதுவாக கோடை காலத்தில் கடல் நீர் வற்றி உள்வாங்கும். ஆனால், தற்போதைய மழை மற்றும் புயல் நேரத்தில் கடல் நீர் உள் வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடலில் அலை எழும்பாமல் அமைதியாக காணப்படுவதும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது என்றனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுவாக அனைத்து காலங்களிலும் கடல் நீர் உள்வாங்குவது என்பது வழக்கமான நிகழ்வு தான். ஆகவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

Next Story