காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தற்காலிக சந்தை, பூ மார்க்கெட் அடைப்பு - காய்கறிகள் விலை உயரும் அபாயம்
காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தற்காலிக சந்தை மற்றும் பூ மார்க்கெட் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி காந்தி மார்க்கெட், கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான ஜி-கார்னர் திடலில் இரவு மட்டும் மொத்த வியாபாரம் நடந்து வருகிறது. காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்து வருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நகரில் பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தை ஏற்படுத்தி கொடுத்து நடந்து வருகிறது.
இதற்கிடையே திருச்சி காந்தி மார்க்கெட் செயல்பட தடை விதிக்க வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக, காந்தி மார்க்கெட் திறக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பல முறை இடைக்கால தடை நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்த வழக்கு இன்று (26-ந் தேதி) ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஐகோர்ட்டில் அழுத்தம் கொடுத்து இடைக்கால தடையை நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதையொட்டி, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் நேற்று முன்தினம், நேற்று இரவு என 2 நாட்கள் ஜி-கார்னர் திடலில் காய்கறிகளை விற்பதில்லை என்று அறிவித்து போராடி வருகிறார்கள்.
அப்படி இருந்தும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சில வியாபாரிகள், ஜி-கார்னர் திடலில் காய்கறிகளை விற்பனை செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்கு ஆதரவாக நேற்று காந்தி மார்க்கெட் சில்லரை வியாபாரிகள் நடத்தி வந்த தற்காலிக சந்தைகள் மூடப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம், செயின்ட் ஜோசப் கல்லூரி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. மற்றும் திருச்சி சப்-ஜெயில் ரோடு வெங்காய மண்டி ஆகிய இடங்களில் இயங்கி வந்த தற்காலிக சந்தைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், காய்கறி வாங்க வந்த நுகர்வோர் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள காய்கறி கடைகள், பூக்கடைகளும் மொத்த வியாபாரிகளுக்கு ஆதரவாக கடைகளை அடைத்திருந்தனர். எப்போதும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்து காணப்படும் காந்தி மார்க்கெட் சாலை நேற்று ஆட்கள் நடமாட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அரியமங்கலம் ரவுண்டானா அருகே உள்ள புதிய வெங்காய மண்டி மற்றும் உருளை கிழங்கு மண்டியும் செயல்பட வில்லை.
அதே வேளையில் புயல், மழை காரணமாக காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதன்படி, நேற்று வாழைக்காய் மண்டி செயல்பட வில்லை. காய்கறி மார்க்கெட் தொடர்ந்து செயல்படாமல் இருந்தால் காய்கறிகளின் விலை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப்போகிறது? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
Related Tags :
Next Story