எலச்சிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் தொடங்கியது - உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
எலச்சிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் தொடங்கியது. இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடமாறுதல் செய்யப்பட்டு குமாரமங்கலத்தில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது எலச்சிபாளையம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் இப்பகுதி பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இதனை பயன்படுத்த முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நூதனமான முறையில் பாடை கட்டும் போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 108 ஆம்புலன்சை மீண்டும் இயக்கக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் எலச்சிபாளையத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்திற்கு முன்னதாகவே சுகாதாரத் துறையினர் 108 ஆம்புலன்சை எலச்சிபாளையம் பகுதிக்கு உறுதிப்படுத்தி அப்பகுதிக்கு நிரந்தரமாக சேவை செய்ய வாகனத்தை பயன்படுத்த அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் உடனடியாக திரண்டு எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் நின்ற அந்த வாகனத்துக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து, தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும், சுகாதாரத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story