நிலத்தை கிரையம் செய்து கொடுப்பதாக ரூ.1½ கோடியை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டவர் கைது
நிலத்தை கிரையம் செய்வதாக கூறி ரூ.1½ கோடியை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா முனியப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). இவர் பெங்களூருவில் தற்போது வசித்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு கலசபாக்கம் தாலுகா வட புழுதியூர் கிராமத்தில் பல ஏக்கர் நிலம் உள்ளது. இவரது நிலத்தின் அருகில் திருவண்ணாமலை கிருஷ்ணன் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி செல்விக்கு சொந்தமாக 4.26 சென்ட் நிலம் இருந்து உள்ளது.
செல்வி தனது நிலத்தை விற்க முடிவு செய்து கிரையம் பெற்று கொள்ளுமாறு முனியப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணிக்கத்தை அணுகியுள்ளார். இதையடுத்து மாணிக்கம் செல்வியின் தரப்பினரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.1½ கோடி வரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக்கொண்ட செல்வி மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் கடந்த 9-ம் தேதி நிலத்தை கிரையம் செய்து கொடுப்பதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்துள்ளனர். மறுநாள் வடபுழுதியூர் கிராமத்தில் உள்ள அவரது நிலத்தில் மாணிக்கம் இருந்த போது அங்கு வந்த செல்வி மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் நிலத்தை கிரையம் செய்து கொடுக்க முடியாது என்றும், இடத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாணிக்கம் புகார் செய்தார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணிக்கத்திடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமலும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து செல்வி மற்றும் அவரது மகன் சுரேஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.
Related Tags :
Next Story