ஜோலார்பேட்டை அருகே பைனான்ஸ் அதிபர் அடித்துக்கொலை - வக்கீல் குமாஸ்தா உள்பட 3 பேர் கைது
ஜோலார்பேட்டை அருகே பைனான்ஸ் அதிபர் இரும்பு ராடால் அடித்து கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக வக்கீல் குமாஸ்தா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த திரியாலம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மகன் ஆனந்த்பாபு (வயது35). இவர் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பிராய்லர் கோழிகளை விற்பனை செய்து வந்தார். இதற்காக கந்திலி பகுதியில் அலுவலகம் வைத்திருந்தார். மேலும் ஒட்டப்பட்டி அருகே உள்ள குட்டூர் பகுதியில் நிதி நிறுவனம் (பைனான்ஸ்) நடத்திவந்தார்.
தினமும் பைனான்ஸ் அலுவலத்தை இரவு 9 மணி அளவில் பூட்டிக்கொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஆனந்த்பாபு பைனான்ஸ் அலுவலகத்தை பூட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் திரியாலம் நோக்கி சென்றுள்ளார். ஆனால் அவர் வீடுசென்று சேரவில்லை.
குட்டப்பட்டியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள எக்ஸ் தலைவர் வட்டம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக சென்ற திரியாலம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஆனந்த்பாபு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் சிவா என்ற சிவன் (34), ஜெய்பீம் நகரை சேர்ந்த குமரேசன் மகன் சிலம்பரசன் (26), வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்த மோகன் மகன் சிதம்பரம் என்ற தங்கபாலு ஆகிய 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காதல் பிரச்சினையில் ஆனந்த்பாபு கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த சிவா என்ற சிவன் என்பவர் வக்கீல் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் திரியாலம் பகுதியிலுள்ள ஆனந்த்பாபுவின் உறவினர் மகளான இளம்பெண் ஒருவருக்கும், சிவாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த இளம்பெண்ணை, ஆனந்பாபுவுக்கு திருமணம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிவா கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, ஆனந்த்பாபு உயிரோடு இருந்தால்தானே நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வான் என எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களான சிலம்பரசன், சிதம்பரம் என்ற தங்கபாலு ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஆனந்த்பாபுவை பின்தொடர்ந்து சென்று அவருடைய மோட்டார்சைக்கிள் மீது மோதி உள்ளனர்.
இதில் கீழே விழுந்த ஆனந்த்பாபுவை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து ஆனந்பாபு சகோதரர் சிதம்பரம் கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வழக்குப் பதிவு செய்து வக்கீல் குமாஸ்தா சிவா உள்பட 3 பேரையும் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story