புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்க தேவையான உணவு பொருட்கள் இருப்பு உள்ளது அமைச்சர் பேட்டி


புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்க தேவையான உணவு பொருட்கள் இருப்பு உள்ளது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2020 5:46 PM IST (Updated: 26 Nov 2020 5:46 PM IST)
t-max-icont-min-icon

புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர், 

நிவர் புயல் முன்னெச்சரிக்கையையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் பல்நோக்கு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேற்று அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி, மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதா? அரசு அறிவித்த நிலையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா? பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

கழிவறை வசதி

பொதுமக்களிடம் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா? என கேட்டறிந்து, தங்களும், தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாக தங்கி இருக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது அப்பகுதி மக்கள் கழிப்பறை வசதி இல்லை என்று கூறினர். இதையடுத்து அங்கு கழிவறை வசதி அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்வதாகவும், தேவைப்பட்டால் அரசு கல்லூரிக்கு அனைவரும் செல்ல ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:-

மின் ஊழியர்கள்

கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் பாதிப்படையும் வகையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு மையங்களுக்கு வந்து தங்க வேண்டும். மேலும் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் மீட்பு பணிக்காக மாவட்டத்திற்கு வந்துள்ளனர். தேவைக்கேற்ப பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின் பணியாளர்கள் வருவார்கள். புயல் கரையை கடந்து முடியும் வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம், மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்.

உணவு பொருட்கள்

அத்தியாவசிய உணவு பொருட்கள், குடிநீர், மெழுகுவர்த்தி, பேட்டரி விளக்கு, தீப்பெட்டி ஆகியவைகளை தயாராக வைத்துக்கொள்ளவும். பழைய கட்டிடங்களில் தங்கவோ, அருகில் செல்லவோ வேண்டாம். கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ, கடந்து செல்லவோ வேண்டாம். பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும்.அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். ஆய்வின் போது கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, கடலூர் தாசில்தார் பலராமன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story