டிசம்பர் 1-ந்தேதி முதல் எலாஸ்டிக்கின் விலை 20 சதவீதம் உயர்கிறது சங்க கூட்டத்தில் தீர்மானம்
வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் எலாஸ்டிக்கின் விலை நடப்பு விலையில் இருந்து 20 சதவீத உயர்வுடன் அமலுக்கு வரும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைவர் ஆர்.பி.கோவிந்தசாமி தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் சந்திர மோகன் 2019-2020-ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் செயலாளர் சவுந்தரராஜன், துணைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் முத்து முருகன் மற்றும் நிர்வாகிகள் முருகசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 2017-2020-ம் கால சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது கொரோனா பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு, வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இதே நிர்வாக குழுவை நீட்டிப்பது. அதன் பின் சங்க தேர்தலை நடத்தி புதிய நிர்வாக குழுவிடம் பொறுப்பை ஒப்படைப்பது.
20 சதவீத விலை உயர்வு
எலாஸ்டிக் துறைக்கு மிக முக்கிய மூலப்பொருட்களாக பாலியஸ்டர் நூல், இயற்கை ரப்பர், லைக்ரா விளங்குகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் பாலியஸ்டர் நூல் இதுவரை 20 சதவீதமும், ரப்பர் 35 சதவீதமும், லைக்ரா 15 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை தொடர்ந்து கொண்டிருப்பதால், பருவகால மாற்றம் சர்வதேச பொருளாதார காரணங்களால் கடும் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. இதுபோல் உள்ளாடை உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் எலாஸ்டிக் துறையானது, கொரோனா பாதிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, வாராக்கடன் போன்றவற்றால் தடுமாறி வருகிறது.
மேலும், நிட்டிங், டையிங், பிரிண்டிங் போன்ற ஜாப் ஒர்க் தொழில்களை போல் இல்லாமல் எலாஸ்டிக் துறைக்கு தேவையான ரப்பர் மற்றும் பாலியஸ்டர் நூலை எலாஸ்டிக் உற்பத்தியாளர் களே கொள்முதல் செய்து எலாஸ்டிக் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.
எனவே மூலப்பொருட்கள் விலை உயர்வானது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தொழிலை காக்கும் வகையில், எலாஸ்டிக்கின் விலை நடப்பு விலையில் இருந்து 20 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வருகிற டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் கள் சங்கம், டீமா உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் பேசப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story