புயல் நிவாரண பணிக்காக குமரியில் இருந்து 100 பணியாளர்கள் விழுப்புரம் புறப்பட்டனர்
புயல் நிவாரண பணிக்காக குமரி மாவட்டத்தில் இருந்து 100 பணியாளர்கள் விழுப்புரத்துக்கு புறப்பட்டனர்.
நாகர்கோவில்,
தமிழகத்தை மிரட்டிய நிவர் புயலை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன் எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டது. அனைத்து கடலோர மாவட்டங்களும் உஷார் படுத்தப்பட்டன. மேலும் புயல் கரையை கடந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகளுக்கும் பணியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அதோடு நிவாரண பணிகள் தடைபடக் கூடாது என்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் மாமல்லபுரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அதே போல குமரி மாவட்டத்தில் இருந்தும் சுமார் 100 பணியாளர்கள் நேற்று புயல் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மரம் அறுக்கும் எந்திரம்
அதாவது குமரி மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், மரம் அறுப்பவர்கள், மண் அள்ளுபவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 2 அரசு பஸ்களில் புறப்பட்டனர். அதோடு மரம் அறுக்கும் எந்திரம், மண்வெட்டி, மின் மோட்டார்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் பணியாளர்கள் எடுத்து சென்றனர்.
தற்போது புறப்பட்ட பணியாளர்கள் முதற்கட்டமாக விழுப்புரத்தில் தங்க வைக்கப்பட்டு புயல் கரையை கடந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
Related Tags :
Next Story