சத்தியமங்கலத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை சொத்து பிரச்சினையில் விபரீத முடிவு
சத்தியமங்கலத்தில் சொத்து பிரச்சினையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் திருநகர் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 29). இவர் பலகாரங்கள் தயாரித்து கடைகளுக்கு விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மனைவி ஹேமலதா (25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹேமலதாவுக்கும், அவருடைய தாயாருக்கும் சொத்து பிரிப்பதில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹேமலதா மனம் உடைந்து காணப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் தூங்க சென்றார். ஹேமலதா வீட்டில் இருந்த ஒரு அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தொட்டில் மாட்டும் கொக்கியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை குழந்தை வெகு நேரமாக அழுது கொண்டிருந்தது. இதனால் சிவக்குமார் மனைவி இருக்கும் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
அறையில் ஹேமலதா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஹேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் ஹேமலதாவுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story