ஏரிகளில் 8 டி.எம்.சி. இருப்பு: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு இருப்பதால் வரும் கோடைகாலத்தில் போதுமான குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் புறநகர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.
அதேபோல் சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கும் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியுடன் தற்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திறந்து வைத்த கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்தேக்கமும் ஏரிகள் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது. தற்போது ஏரிகளில் 8 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது.
தொடர்ந்து ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு வரும் நீரின் அளவை கண்காணித்து வருகிறோம். ஏரிகள் தற்போது தூர்வாரப்பட்டு இருப்பதால் கூடுதலாக தண்ணீர் சேமிக்க முடியும்.
சராசரியாக ஒரு மாதத்திற்கு சென்னை மாநகருக்கு 1 டி.எம்.சி. வரை குடிநீர் தேவைப்படுகிறது. ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பதால் சென்னை மாநகருக்கு தினசரி 750.87 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேநிலை தொடர்ந்து வழங்கப்படும். வருகிற கோடைக்காலத்திலும் போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஒரு சொட்டு மழை நீரை கூட வீணடிக்காமல் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story