சென்னை மாநகரில் கூவம், அடையாறு ஆறுகளில் 17 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அமைச்சர் வேலுமணி பேட்டி


சென்னை மாநகரில் கூவம், அடையாறு ஆறுகளில் 17 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அமைச்சர் வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 27 Nov 2020 3:45 AM IST (Updated: 27 Nov 2020 6:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகரில் உள்ள கூவம், அடையாறு ஆறுகளில் இருந்த 17 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக உள்ளாட்சிட்த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் கண்ணன் காலனியில் நிவர் புயல் காரணமாக மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் மோட்டார் முலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

அப்போது, அவருடன் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், மெட்ரோ குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அரிகரன், மாநகராட்சி துணை கமிஷனர்கள் மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான், மண்டல கண்காணிப்பு அதிகாரி நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 500 தெருக்களில் தேங்கிய மழை அகற்றப்பட்டது. தற்போது 58 தெருக்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. அவற்றை கூடுதல் எந்திரங்கள் மூலம் 2 தினங்களில் அப்புறப்படுத்தப்படும்.

சென்னையில் நேற்றும் இன்று(நேற்று) மட்டும் 287 மரம் மற்றும் கிளைகள் சாய்ந்தன. 387 புகார்கள் வந்துள்ளன. சென்னையில் பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் இரவோடு இரவாகவே அகற்றப்பட்டுவிட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் உள்ள மொத்தமுள்ள 26 ஆயிரம் ஆக்கிரமிப்புகளில், இதுவரை 17 ஆயிரத்து 500 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு பகுதிகளில் உள்ளாட்சி துறை சார்பில் 36 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகரில் உள்ள சதுப்பு நிலங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிக்கான திட்டம் அரசிடம் உள்ளது. புயல் சேதங்களை கணக்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story