புயல் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள தமிழக அரசு முன்எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரியவில்லை - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
புயல் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள தமிழக அரசு முன்எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரியவில்லை என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
நிவர் புயலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றங்கரையோரம் வசித்து வந்தவர்கள், அதே பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார்.
அப்போது நிவாரண முகாம்களில் வசதிகள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு ஆறுதலும் கூறினார். இதேபோல சைதாப்பேட்டை பகுதியில் அடையாறு ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளத்தையும், மழையை பொருட்படுத்தாமல் அவர் பார்வையிட்டார்.
இதையடுத்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பல அரசுகள் வேறு இடங்களை ஒதுக்கி தருவதாக கூறியதால் ஏமாந்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு மழை காலத்தில் உதவிகள் செய்வதை விட, அவர்களுக்கு தகுந்த இடத்தில் வீடுகளை ஒதுக்கி கொடுக்கவேண்டும் என்பதே தீர்வாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நிவர் புயல் போன்ற பேரிடர்களை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு முன்எச்சரிக்கையுடன் இருக்கிறதா?
பதில்:- எச்சரிக்கையுடன் இருக்கிறது. முன்எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரியவில்லை.
கேள்வி:- முதல்-அமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் விளம்பர பலகைகள் வைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- விளம்பரம் அவர்களுக்கு தேவை. மக்களுக்கு அன்றாடம் தேவை என்னவோ அது தான் முக்கியம். விளம்பர பலகைகள் விழுந்து நடக்கும் உயிரிழப்பு இன்னமும் கூட சென்னையில் நடந்து வருகிறது.
கேள்வி:- கஜா புயலின் போது முழுமையாக நிதி உதவி கொடுக்காமல் இந்த நேரத்தில் நிதி உதவி கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதே?
பதில்:- கஜா புயலின் நிவாரணமே இதுவரை மக்களுக்கு கிடைக்கவில்லை. கண்டிப்பாக தேர்தல் அவசரத்தில் தான் வந்திருக்கிறார்கள். அந்த அவசரத்திலாவது நல்லது நடந்தால் பரவாயில்லை.
கேள்வி:- புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகவில்லையா?
பதில்:- இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம். சென்னையை பொறுத்தவரை முன்பு இருந்ததை விட சிறப்பாக இருக்கிறது. ஆனால் இங்குள்ள மக்களின் நிலையை பார்க்கும் போது பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.
இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story