பாக். பயங்கரவாதி அஜ்மல் கசாப் பிடிபட்டதை நினைவுக்கூர்ந்த போலீசார்
பாக். பயங்கரவாதி அஜ்மல் கசாப் பிடிபட்ட நினைவுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கதம் நேற்று நினைவு நாளில் பகிர்ந்துகொண்டார்.
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கடல்மார்க்கமாக மும்பை நகருக்குள் ஊடுருவி காட்டுமிராண்டித்தன தாக்குதலில் ஈடுபட்ட மறக்க முடியாத சம்பவத்தின் 12-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஒன்றும் அறியாத 166 பேரின் உயிரை சூரையாடிய 10 பயங்கரவாதிகளில் 9 பேரை பாதுபாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால் இளம் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை மட்டும் பாதுகாப்பு படையினர் உயிருடன் பிடித்தனர்.
இதற்காக போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்லே என்பவர் தனது உயிரையே பறிகொடுத்தார்.
நாட்டை உலுக்கிய இந்த கோர சம்பவம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் நாட்டு மக்கள் மனதில் ஆறாத வடுவாக பதிந்துள்ளது.
அப்படி மறக்க முடியாமல் தவிக்கும் அந்த நினைவுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கதம் நேற்று நினைவு நாளில் பகிர்ந்துகொண்டார்.
அப்போது டி.பி.மார்க் போலீஸ் நிலைய சிறப்பு அதிகாரியாக இருந்த கதம், அஜ்மல் காசப்பை பிடித்த 16 பேர் கொண்ட பாதுகாப்பு படையிலும் இடம் பெற்றிருந்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அந்த மோசமான சமயத்தில் அதிகாரிகள் கொடுத்த முக்கியமான தகவல்கள், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் மும்பை போலீசாரின் கூட்டு முயற்சியால் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இல்லையெனில், அவர்களின் தாக்குதல்களில் எத்தனை பேர் மாண்டிருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
கிர்காம் பகுதியில் நாங்கள் பாதுகாப்பு பணியில் இருந்தோம். அப்போது அஜ்மல் கசாப் மற்றும் மற்றொரு பயங்கரவாதி வந்த காரை வழிமறித்தோம்.
போலீசாரை சோதனைச்சாவடியில் பார்த்ததும் அந்த கார் 50 அடி முன்பாகவே நிறுத்தப்பட்டது.
அடுத்து என்ன நடக்கும் என யோசிப்பதற்குள் பயங்கரவாதிகள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக நாங்களும் பதில் தாக்குதலில் இறங்கினோம்.
நான் எனது துப்பாக்கியை எடுத்து வாகனத்தில் ஓட்டுனர் இருக்கையில் இருந்தவரை நோக்கி 3 ரவுண்ட் சுட்டேன்.
இதில் அந்த பயங்கரவாதியின் தலையில் குண்டு பாய்ந்தது.
மறுபுறத்தில் இருந்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்லே உள்ளிட்ட ஒரு குழு, ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்திருந்த கசாப்பை பிடிக்க விரைந்தது. துக்காராம் ஒம்லே, அஜ்மல் கசாப்பை பின்னால் இருந்து பாய்ந்து பிடித்தார். ஆனால் பயங்கரவாதி சுட்ட குண்டு அவரது மார்பில் பாய்ந்தது.
ஆனால் போலீசார் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை தங்கள் லத்தியால் தாக்கி மடக்கினர்.
அவரை உயிருடன் பிடிப்பது இன்ஸ்பெக்டர் சஞ்சய் கோவில்கர் எடுத்த முடிவுதான், ஏனெனில் அவரை உயிருடன் பிடிப்பதன்மூலம் பயங்கரவாத சதியில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் சதிதிட்டம் குறித்த முக்கிய தகவல்கள் வெளிவரும் என நம்பினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயங்கரவாதிகள் பிடிக்கும் முயற்சியில் மாநில பயங்கரவாத தடுப்பு படை தலைவர் ஹமந்த் கார்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷ்னர் அசோக் காம்தே மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சாலேஸ்கர் ஆகியோரும் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.
உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் கடந்த 2012-ம் ஆண்டு புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story