ஏரிகள் நிரம்பி வழிகின்றன, சுற்றிச் சுழன்ற ‘நிவர்’ புயலால் பலத்த மழை: வெள்ளத்தில் மிதக்கும், புதுச்சேரி - 5 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது


ஏரிகள் நிரம்பி வழிகின்றன, சுற்றிச் சுழன்ற ‘நிவர்’ புயலால் பலத்த மழை: வெள்ளத்தில் மிதக்கும், புதுச்சேரி - 5 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 27 Nov 2020 5:30 AM GMT (Updated: 27 Nov 2020 5:17 AM GMT)

சுற்றிச் சுழன்ற ‘நிவர்’ புயலால் பலத்த மழை பெய்ததையொட்டி புதுச்சேரி வெள்ளத்தில் மிதக்கிறது. தாழ்வான பகுதியில் 5 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

புதுச்சேரி,

வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல் அதி தீவிரமாக மாறி புதுவையை அடுத்த மரக்காணம் பகுதியில் நேற்று அதிகாலை கரையை கடந்தது.

இதையொட்டி கடந்த 3 நாட்களாக புதுவையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புயல் கரையை கடக்க தொடங்கிய போது பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது.

நேற்று அதிகாலை 3 மணி வரை மிரட்டும் சத்தத்துடன் புயல் மழையும் காற்றும் சுற்றிச் சுழன்றது. அதன்பிறகும் காலை 9 மணி வரை தூறல் பெய்தபடியே இருந்தது. இதனால் கடல் வழக்கத்துக்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்து சீறிப்பாய்ந்தன. கடலோர பகுதிகளான தேங்காய்திட்டு, வைத்திக்குப்பம், சோலைநகர், வம்பாக்கீரப்பாளையம், வீராம்பட்டினம், நல்லவாடு, மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம், கன்னிய கோவில் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மழைநீர் சூழ்ந்தது.

புதுவை நகர சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், பாவாணர் நகர், ராஜாஜி நகர், தென்றல் நகர், நேதாஜி நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், விடுதலை நகர், புஸ்சி வீதி, லெனின் வீதி, இந்திராகாந்தி சிலை சதுக்கம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

சில இடங்களில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கின. இது பற்றிய தகவலறிந்து பொதுப்பணி, உள்ளாட்சி துறை அதிகாரிகள் அங்கு சென்று மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அங்கு வசித்தவர்கள் வெளியே வாரி இறைத்தனர்.

வெள்ளம் வடியாத பகுதியில் வசித்து வந்தவர்களில் பலர் தங்களுக்கு தேவையான உடமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு மையங்களுக்கு வந்து தங்கினர். மேலும் சிலர் தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்றனர். வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்த முதியவர்கள் வெளியே வர முடியாமல் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து தெரியவந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு வாகனங்கள் மூலம் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர். மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். வருவாய்துறை சார்பில் அவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.

புதுச்சேரி நகர பகுதியான புஸ்சி வீதி, அண்ணாசாலை, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, வர்த்தக சபை, பாரதி பூங்கா, சுய்ப்ரேன் வீதி, மரைன் வீதி, மாதா கோவில், சுப்பையா சாலை, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை உள்பட பல இடங்களில் புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெரிய, சிறிய மற்றும் கிளைகள் என 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இதுபற்றி அறிந்து தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் பல பிரிவுகளாக அந்த பகுதிகளுக்கு சென்று அந்த மரங்களை துண்டு துண்டாக வெட்டி நகராட்சி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

‘நிவர்’ புயல் கரையை கடந்ததையொட்டி விடிய விடிய காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரேநாளில் 30.35 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

புயல் மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமப்புறங்களில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்குப் பிறகு மழை சற்று குறைந்ததை தொடர்ந்து மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நகர் முழுவதும் ஆய்வு செய்தனர். பின்னர் சில இடங்களில் காலை முதலும், பெரும்பாலான இடங்களில் நேற்று மதியத்திற்கு பிறகும் படிப்படியாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.

புயல் மழையால் புதுவை நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ள சேத பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், நேதாஜி நகர், பாவாணர் நகர், வம்பாகீரப்பாளையம், முதலியார்பேட்டை உள்பட நகர் முழுவதும் சென்று வெள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டார்.

அப்போது அதிகாரிகளை அழைத்து தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் மரப்பாலத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த அதிகாரிகளிடம் அனைத்து பகுதிகளுக்கும் 12 மணி நேரத்திற்குள் மின்சாரம் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மழையின் காரணமாக பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரியில் 21 ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.

புதுச்சேரி மாநிலத்தின் 2வது பெரிய ஏரியான பாகூர் ஏரியில் 1.74 மீட்டர் உயரத்திற்கு நீர் தேங்கி உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சித்தேரி அணைக்கட்டு, கொமந்தான் அணைக்கட்டுகள் நிரம்பி வழிகிறது.

Next Story