உளுந்து, பாசிப்பயறு பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை


உளுந்து, பாசிப்பயறு பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Nov 2020 11:30 AM IST (Updated: 27 Nov 2020 11:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், உளுந்து, பாசிப்பயறு பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. அதன் பிறகு இந்த கூட்டம் நடைபெறவில்லை. நேற்று காலையில் 8 மாதங்களுக்கு பிறகு காணொலி காட்சி மூலம் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள், அந்தந்த வட்டார உதவி வேளாண்மை அலுவலர் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அலுவலர்கள் பதில் அளித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது:- ‘கூட்டுறவு சங்கங்கங்களில் டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடு உள்ளது. உளுந்து, பாசிப்பயறு காப்பீடு செய்வதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை கிடைக்கவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரம்பள்ளம் பகுதியில் நெல் சாகுபடி செய்து உள்ளோம். இதற்கு காப்பீடு செய்தால், கம்ப்யூட்டரில் ஏறவில்லை என்று தெரிவிக்கிறார்கள். காப்பீடு செய்வதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

உடன்குடி பகுதியில் நிலத்தடிநீர் உப்பாக மாறி உள்ளது. இதனை தடுக்க சடையநேரி கால்வாய் மூலம் தண்ணீரை கொண்டு வந்து அனைத்து குளங்களையும் நிரப்ப வேண்டும். சடையநேரி கால்வாய் எங்களுக்கு வாழ்வாதாரம் ஆகும். தற்போது சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால், சடையநேரி குளத்துக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறது. இதனால் இடையில் தடுப்பு சுவர் அமைத்து, புத்தன்தருவை குளத்துக்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணி தடை காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதுவரை, சடையநேரி குளத்துக்கு 10 நாட்களும், புத்தன்தருவைகுளத்துக்கு 10 நாட்களும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போன்று கருமேனியாறு தண்ணீரையும் புத்தன்தருவை குளத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கருமேனியாற்றில் நீர்த்தேக்கம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. அந்த பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். வெள்ளநீர்க்கால்வாய் எம்.எல்.தேரி வரை அமைக்கப்படுகிறது. அந்த தண்ணீர் மணப்பாடு வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் தாமதமாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பருவம் பிந்தி உள்ளது. கடம்பா குளத்தில் இருந்து செல்லும் மறுகால் ஓடையை 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழை சாகுபடி செய்து உள்ளோம். தற்போது வாழைக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி, வைப்பாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஓட்டப்பிடாரம் பகுதியில் நெல் சாகுபடி செய்து உள்ளோம். ஆனால் தற்போது காப்பீடு திட்டத்தில் சேர முடியவில்லை. ஆகையால் காப்பீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது போன்ற விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு தூத்துக்குடியில் சந்தை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:- மாவட்டத்தில் சராசரி மழை அளவு 662 மில்லி மீட்டர் ஆகும். இதுவரை 395 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. 40 சதவீதம் மழை குறைவாக உள்ளது. டிசம்பர் மாதத்தில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம் இயல்பை விட 38 சதவீதம் அதிகம் பெய்து உள்ளது. குளங்களுக்கு அதிக தண்ணீர் வந்து உள்ளது. அணையில் போதுமான தண்ணீர் உள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 959 எக்டேர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள். மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் இருப்பதால், வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு முக்கியமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உழவன் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உரம் இல்லாமல் இருந்தால், உடனடியாக வாங்கி வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

படைப்புழு தாக்கத்துக்கு விவசாயிகள் மருந்து வாங்கி தெளித்து, அதற்கு உரிய பில்லை கொடுத்தால் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் நிரந்தரமாக கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் மறுகால் ஓடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாழை விளைச்சல் பாதிப்பு இருந்தால் மட்டுமே காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story