பிசான சாகுபடிக்காக 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு


பிசான சாகுபடிக்காக 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 27 Nov 2020 11:15 AM IST (Updated: 27 Nov 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அச்சன்புதூர்,

பிசான சாகுபடிக்காக தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, அடவிநயினார், கடனாநதி, ராமநதி ஆகிய 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கடையநல்லூர் அருகே 72.18 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் நேற்று 68.4 அடி நீர்மட்டம் இருந்தது. அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக வினாடிக்கு 25 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால் வழியாக 9,514.7 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தொடர்ந்து 125 நாட்களுக்கு 25 கன அடி வீதம் 180.37 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

விழாவில் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர், மணிகண்டராஜன், உதவி பொறியாளர் சரவணன், கடையநல்லூர் நகர அ.தி.மு.க. செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை அருகே மேக்கரையில் அமைந்துள்ள 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் நேற்று 102 அடி தண்ணீர் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 125 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மேட்டு கால்வாய், கரிசல் கால்வாய், பண்பொழி கால்வாய், வல்லாக்குளம் கால்வாய், சாம்பவர்வடகரை கால்வாய், இரட்டைக்குளம் கால்வாய் வழியாக 7,643.15 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

அணை திறப்பு நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ஜாகீர் உசேன், அடவிநயினார் நீர்த்தேக்க நீரை பயன்படுத்துவோர் சங்க முன்னாள் தலைவர் செல்லத்துரை, விவசாய சங்க பிரதிநிதிகள் ராசு, சோழன், முருகையா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையில் 82.40 அடி நீர்மட்டம் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 125 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. உதவி செயற்பொறியாளர் கணபதி, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 80.50 அடி நீர்மட்டம் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. உதவி செயற்பொறியாளர் முருகேசன், அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அணைகளில் நீர்வரத்து, தண்ணீர் இருப்பை பொறுத்து 125 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

Next Story