புயலில் இருந்து தப்பித்த போதும் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை


புயலில் இருந்து தப்பித்த போதும் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 27 Nov 2020 9:27 AM GMT (Updated: 27 Nov 2020 9:27 AM GMT)

புயலில் இருந்து தப்பித்த போதும் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கறம்பக்குடி, 

கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. மழை காலங்களில் பெய்யும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி அதன் மூலமும், ஆழ்குழாய் பாசனம் மூலம் மட்டுமே, அப்பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதாலும், பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையாலும், அப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வேளையில் இந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யாத நிலையில், தற்போது உருவான நிவர் புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. புயல் பயம் இருந்தபோதும், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர்.

விவசாயிகள் கவலை

ஆனால், நிவர் புயலால் கறம்பக்குடி பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்ற போதும், மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து பாசன குளங்களும், ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. இதனால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கறம்பக்குடி பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், கஜா புயல் போன்று நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்தோம். ஆனால் புயல் பாதிப்பிலிருந்து தப்பித்த போதும் மழை இல்லாதது பெரும் கவலையை தந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஏரி, குளங்கள் 80 சதவீதத்திற்கு மேல் நிரம்பி இருந்த நிலையில், தற்போது வறண்டு கிடப்பது வருத்தமாக உள்ளது. நல்ல மழை பெய்தால் மட்டுமே விவசாயத்தையும், கோடை காலத்தையும் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் சமாளிக்க முடியும் என தெரிவித்தார்.

வடகாடு

வடகாடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நிவர் புயல், கஜா புயலை போல பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சத்துடன் இருந்தனர். ஆனால், புயல் திசை மாறி சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், நிவர் புயலால் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சாரல் மழை மட்டுமே பெய்ததால் மிளகாய், கத்தரி போன்ற காய்கறி சாகுபடி செய்ய முடியாமல் காத்திருக்கின்றனர்.

Next Story