டிசம்பர் மாதம் வரை மழை இருப்பதால் கண்காணிப்பு பணி தொடரும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புகள் இல்லை


டிசம்பர் மாதம் வரை மழை இருப்பதால் கண்காணிப்பு பணி தொடரும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புகள் இல்லை
x
தினத்தந்தி 27 Nov 2020 4:07 PM IST (Updated: 27 Nov 2020 4:07 PM IST)
t-max-icont-min-icon

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புகள் இல்லை. டிசம்பர் மாதம் வரை மழை இருப்பதால் கண்காணிப்பு பணிகள் தொடரும் என்று தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் நிவர் புயல் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனருமான சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் நிவர் புயல் மழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 122 நிவாரண முகாம்களில் மொத்தம் 5 ஆயிரத்து 366 பேர் தங்க வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் மனித உயிரிழப்பு ஏதுமில்லை. மாவட்ட சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்படவில்லை. போக்குவரத்து ஏதும் தடைபடவில்லை. மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக சேதம் அடைந்த 20 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் விழுந்த மரங்களும் அற்புறப்படுத்தப்பட்டன.

49 புகார்கள்

வெள்ள தடுப்பு பணிக்களுக்காக 41 இடங்களில் 1,06,600 மணல் மூட்டைகளும், 8269 சவுக்கு கட்டைகளும், 2,10,350 காலிசாக்கு பைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. 3000 மின்கம்பங்கள், மின்வாரியத்தால் இருப்பு வைக்கப்பட்டன. 552 மரம் அறுக்கும் கருவிகள், 205 பொக்லின் எந்திரங்கள், 173 ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

16 மருத்துவ முகாம்கள் மூலமாக நிவாரண முகாம்கள் ஆய்வு செய்யப்பட்டு கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ்கள், 29 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டியிருந்தன. புயல் தொடர்பாக 49 புகார் மனுக்கள் பெறப்பட்டதில் 48 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் அகற்றும் பணி வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை தொடரும்

டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்குமென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் மழை புயல் சேதம் தொடர்பாக புகார்களை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story