சேலம் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பு


சேலம் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Nov 2020 6:23 PM IST (Updated: 27 Nov 2020 6:23 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைபெற்ற பொது வேலை நிறுத்த போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் பொதுத்துறை பணியாளர்கள் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். வங்கிகளுக்கு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடின.

சேலம், 

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்த அளவில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகள் வெறிச்சோடின

சேலம் மாவட்டத்தில் வங்கிகள், இன்சூரன்ஸ் ஊழியர்கள் முழுமையாக பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் அவர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோடிக்கணக்கான பணம் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் சேலம் ரெயில்வே கோட்டத்தில் நேற்று ரெயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கம் சார்பில் அதன் கோட்ட செயலாளர் அல்லிமுத்து தலைமையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் மிகக்குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே அரசு அலுவலகங்களுக்கு வந்து இருந்ததை காண முடிந்தது.

கிராம ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்தமட்டில் 60 சதவீதத்திற்கும் மேலான தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. நிவர் புயல் காரணமாக பல்வேறு நகரங்களில் பஸ்கள் இயக்கப்படாததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் போக்குவரத்து பணிமனைகளில் வரிசையாக பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

3 லட்சம் பேர்

மாவட்டம் முழுவதும் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் 1½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அதாவது, ஒட்டுமொத்தமாக வங்கி, இன்சூரன்ஸ், அரசு ஊழியர்கள், கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை, பல்வேறு தனியார் ஆலை தொழிலாளர்கள் என சுமார் 3 லட்சம் பேர் சேலம் மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் பொதுத்துறை நிறுவனங்களில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

நிவர் புயல் காரணமாக சேலத்தில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story