மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2020 1:20 PM GMT (Updated: 27 Nov 2020 1:20 PM GMT)

மத்திய அரசை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

விவசாயம், தொழில்துறை தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் அடங்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மணி, தொ.மு.ச. தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் சண்முகராஜா, அன்புமணி, சின்னசாமி, ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில நிர்வாகி தங்கவேல், ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி முருகன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பாலக்கோடு-நல்லம்பள்ளி

பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு தொழிற்சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மத்திய சங்க துணைத்தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பணிமனை தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் யுவராஜ், அமானுல்லா மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி இந்தியன் வங்கி முன்பு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட நிர்வாகி முரளி தலைமை தாங்கினார். இதில் தமிழ் மாநில விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அரூர்-பென்னாகரம்

இதேபோல் அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினார்கள். பாப்பாரப்பட்டி பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துகக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டார துணை செயலாளர் குழந்தைவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராஜாமணி, முனியப்பன், சிலம்பரசன் மற்றும் மனோன்மணி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நகர்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story