சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 409 பேர் கைது


சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 409 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2020 3:09 PM GMT (Updated: 27 Nov 2020 3:09 PM GMT)

சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 409 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியா முழுவதும் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விஸ்வம் சந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மகளிரணியை சேர்ந்த ஏலம்மாள், சி.ஐ.டி.யு.வை சேர்ந்த வீரையா மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த வீரபாண்டி காளை, லிங்கம் வீரகாளை உள்ளிட்டவர்கள் பஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

அங்கு எம்.ஜி.ஆர். சிலை அருகில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 120 பேரை சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை கண்டித்தும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும், நகர்ப்புறங்களையும் விரிவாக்கி கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

வங்கி, தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இது போல ஒரு சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் மட்டும் வேலைக்கு வந்து இருந்தனர். ஆனால் வங்கி பணிகள் நடைபெறவில்லை. தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க சிவகங்கை கோட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் எழுத்தர் சங்கம், தபால்காரர் சங்கம் மற்றும் அகில இந்திய புறநிலை ஊழியர் சங்ககங்களை சார்ந்த அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் கோட்ட செயலர் மதிவாணன், தபால்காரர் நான்காம் பிரிவு ஊழியர்களின் கோட்ட செயலாளர் நடராஜன், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க உதவி தலைவர் செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்தனர். அங்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வடக்கு மற்றும் தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 175 பேரை கைது செய்தனர்.

இளையான்குடி

இளையான்குடி கண்மாய்க்கரை பஸ் நிறுத்தத்தில் மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.போராட்டத்திற்கு விவசாய சங்கங்களின் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார். அப்பொழுது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 15 பெண்கள் உள்பட 60 பேரை இளையான்குடி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தேவகோட்டை

தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் இருந்து தபால் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்ற தொழிற்சங்கத்தினர் பஸ் நிலையம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மீனாள் சேதுராமன், லட்சுமணன், பொன்னுச்சாமி, அஜிஸ், வக்கீல் கணேசன், துரைராஜ் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுவயல் மேட்டுக்கடை பகுதியில் சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பாண்டித்துரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரை சாக்கோட்டை போலீசார் கைது செய்தனர்

Next Story