மும்பை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா இடிப்பு - சட்டவிரோதம் இழப்பீட்டை மதிப்பிட ஐகோர்ட்டு உத்தரவு


மும்பை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா இடிப்பு - சட்டவிரோதம் இழப்பீட்டை மதிப்பிட ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Nov 2020 3:30 AM IST (Updated: 28 Nov 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களாவின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்தது சட்டவிரோதம் என்று அறிவித்த ஐகோர்ட்டு இழப்பீட்டை மதிப்பிட தனியார் நிறுவனத்தை நியமித்து தீர்ப்பு அளித்தது.

மும்பை, 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை போலீசார் மீதும், மராட்டிய அரசு மீதும் டுவிட்டரில் வசைப்பாடினார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிடவும் செய்தார். அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை பாலிஹில் பகுதியில் உள்ள பங்களாவின் ஒரு பகுதியை கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது.

இதையடுத்து தனது பங்களாவை இடித்தது சட்டவிரோதம் என்றும், இதற்காக ரூ.2 கோடி இழப்பீடு தர மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நடிகை கங்கனா ரணாவத் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கதாவாலா, சக்லா ஆகியோர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து கடந்த மாதம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்தநிலையில் கங்கனா ரணாவத் மனு மீது நேற்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அப்போது, நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா இடிப்பு சட்டவிரோதம் என்றும், இது இழப்பீடு கோர தகுதியான வழக்கு என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது.

நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக மாநகராட்சியால் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானத்தையும், அரசு மற்றும் திரைப்படத்துறைக்கு எதிரான அவரது எந்த கருத்தையும் கோர்ட்டு ஆதரவிக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட நடிகை மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றவர் என்பதால் அவர் கட்டுப்பாட்டுடன் வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட வேண்டும்.

அதேவேளையில் அரசு தனிநபர் மீது தனது தோள் பலத்தை கட்டாமல், சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும்போது நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா இடிப்பு சட்டத்தின் பார்வையில் மோசமானது. தீய தன்மை கொண்டது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. மேலும் மனுதாரர் இழப்பீடு பெற தகுதியானவர். எனவே இழப்பீடு தொகையை மதிப்பீடு செய்யும் பணிக்காக சேத்கிரி என்ற தனியார் நிறுவனத்தை நியமிக்கிறோம். இழப்பீடு மதிப்பீட்டின் அடிப்படையில் கோர்ட்டு உரிய உத்தரவை பிறப்பிக்கும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story