தோகைமலை அருகே, திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை - காதலன் மீது வழக்குப்பதிவு
தோகைமலை அருகே காதலன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை,
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி, காரணம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் தமிழ்மதி (வயது 22). இவர் திருச்சி மாவட்டம், பூலாங்குலத்துபட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எட் படித்து வந்தார்.
அதேபகுதியை சேர்ந்தவர் ராசு மகன் யுவன்ராஜ் (27). பொக்லைன் ஆபரேட்டரான இவர், தமிழ்மதியை ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தமிழ்மதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் தமிழ்மதி 2 மாத கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. இதையறிந்த யுவன்ராஜ் கடந்த 24-ந்தேதி தமிழ்மதிக்கு கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். இதில் கருக்கலைந்ததால், அவருக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்மதி மிகவும் அவதிக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்தநிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, யுவன்ராஜிடம், தமிழ்மதி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த யுவன்ராஜ் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தமிழ்மதி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் தீக்காயம் அடைந்த தமிழ்மதியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தமிழ்மதியின் தந்தை பழனியப்பன் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின், மகளின் தற்கொலைக்கு காரணமான யுவன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் யுவன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story