மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2020 4:15 AM IST (Updated: 28 Nov 2020 9:43 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர் கே.ஏ.மனோகரன் தலைமை தாங்கினார். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயவாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க செயலாளர் அனுமப்பா, முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் சேகர், வெங்கடேஷ், சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று மாவட்டத்தில் ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்கள் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். வருமான வரி செலுத்துவோர் குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். கொரோனா பாதிப்பு நீங்கும் வரை ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக்கி தொழிலாளர்களுக்கு தலா ரூ.400 கூலி வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை ஊக்குவிக்கும் சட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு விற்பதை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story