கந்தம்பாளையம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
கந்தம்பாளையம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கந்தம்பாளையம்,
கந்தம்பாளையம் அருகே உள்ள சித்தாளந்தூர் கொங்கு நகரை சேர்ந்த ரகுமணி என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (வயது 42). இவர் ஜேடர்பாளையத்தில் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 12.10.2020-ந் தேதி மாலை வேலையை முடித்துவிட்டு அவரது மொபட்டில் சித்தாளந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது கவுண்டிச்சி அம்மன் கோவில் அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சுப்புலட்சுமியை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச்சென்றவர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மணியனூர் பஸ் நிறுத்தம் அருகே வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தபோது அவர் சோழசிராமணி மன்னங்காடு துரைசாமியின் மகன் மணிகண்டன் (வயது 30) என்பதும், இவர் ராமதேவம் கருப்பண்ண கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து திருடி சிறைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும் சுப்புலட்சுமியிடம் 2 பவுன் தங்கச்செயின் பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நல்லூர் போலீசார் நகையை மீட்டு அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story