திருப்பூரில் 700 கிலோ புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது
திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்து வருகிறது. அதன்படி சோதனையில் ஈடுபடுகிற போலீசார் அடிக்கடி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதனை விற்பனை செய்கிறவர்களையும் கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் குன்னத்தூரில் இருந்து காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருப்பூருக்கு கொண்டுவரப்படுவதாக வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று எம்.ஜி.ஆர். சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடை, மூடையாக இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் காரில் வந்தவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குன்னத்தூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) , பாலசிங் (21) என்பதும், இவர்கள் இருவரும் புகையிலை பொருட் களை திருப்பூர் மாநகர் பகுதிகளில் சப்ளை செய்துவந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கார் மற்றும் அவர்கள் கொடுத்த தகவலின் மற்றொரு சரக்கு வாகனத்தில் இருந்து என மொத்தம் 700 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் புகையிலை விற்பனைக்கு பயன்படுத்திய காரும், சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மாநகர பகுதிகளில் பல கடைகளில் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதால், தொடர்ந்து சோதனையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story