கடலில் விழுந்த போர் விமானம் மாயமான விமானியை தேடும் பணி தீவிரம் ‘ தோட்டாவை கடிக்க அனுமதி தாருங்கள் ‘ என கடிதம் எழுதியவர்


கடலில் விழுந்த போர் விமானம் மாயமான விமானியை தேடும் பணி தீவிரம் ‘ தோட்டாவை கடிக்க அனுமதி தாருங்கள் ‘ என கடிதம் எழுதியவர்
x
தினத்தந்தி 29 Nov 2020 3:15 AM IST (Updated: 29 Nov 2020 3:12 AM IST)
t-max-icont-min-icon

கடலில் விழுந்த போர் விமான விபத்தில் மாயமான விமானியை தேடும் பணி நடந்து வருகிறது. இவர் ‘ தோட்டாவை கடிக்க அனுமதி தாருங்கள் ‘ என திருமணத்திற்கு விடுமுறைகேட்டு உயர் அதிகாரிக்கு நகைச்சுவையாக கடிதம் எழுதியவர் ஆவார்.

மும்பை, 

இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக போர் விமானம் கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது அரபிக் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் இருந்த ஒரு விமானி மீட்கப்பட்டார். மற்றொரு இளம் விமானியான நிசாந்த் சிங் மாயமானார். விபத்தில் சிக்கிய போா் விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

விக்ரமாதித்யா ஐ.என்.எஸ். போர் கப்பலில் இருந்து வந்த போது அந்த போர் விமானம் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் மாயமான விமானி நிசாந்த் சிங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாயமான விமானி நிசாந்த் சிங் கடந்த மே மாதம் ‘ தோட்டாவை கடிக்க அனுமதி தாருங்கள் ‘ என திருமணத்திற்கு விடுமுறை கேட்டு உயர் அதிகாரிக்கு நகைச்சுவையாக கடிதம் எழுதியவர் ஆவார். அவர் அந்த கடிதத்தில் தனது திருமணம் குறித்து, “ குறுகிய காலத்தில் உங்கள் மீது இந்த குண்டை தூக்கி போட்டதற்காக வருந்துகிறேன். ஆனால் நானே விரும்பி என் மீது ஒரு அணுகுண்டை தூக்கி போட போவதால் நீங்கள் இதை ஏற்று கொள்வீர்கள் “ என கூறிருந்தார்.

இதற்கு உயர் அதிகாரியும் நகைச்சுவையாக பதில் அளித்து இருந்தார். அவர், “ எல்லா சிறந்த விஷயங்களுக்கும் முடிவு உண்டு. உங்களையும் நரகத்துக்கு வரவேற்கிறேன் “ என கூறியிருந்தார்.

போர் விமான விபத்தில் தேடப்பட்டு வரும் விமானி எழுதிய இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story