செல்போனில் விளையாடிய சிறுவர்களுக்கு போலீசார் அறிவுரை
பாகூரில் செல்போன் மூலம் ஆன்லைனில் விளையாடிய சிறுவர்களிடம் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
பாகூர்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதையொட்டி மாணவர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இவர்களில் பலர் செல்போன் மூலம் ஆன்லைனில் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் படிப்பதில் ஆர்வம் குறைவதால் பெற்றோர் கண்டிப்பதாலும், செல்போன் இல்லாததாலும் பலர் விபரீத முடிவுகளை தேடுகின்றனர்.
இந்தநிலையில் பாகூரை அடுத்த குருவிநத்தம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து செல்போன் மூலம் ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருப்பதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் சவரி ஆகியோர் அங்கு சென்று சிறுவர்களை சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்ததுடன் ஆன்லைன் மூலம் விளையாடுவதால் ஏற்படும் மனஉளைச்சல், பாதிப்பு குறித்து விளக்கினர். இதையடுத்து செல்போனை விடுத்து பாரம்பரியமான விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட அறிவுறுத்தினர்.
அதன்பின் போலீசார் புதிதாக கைப்பந்தை வாங்கிக் கொடுத்து சிறுவர்களை அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று விளையாடும்படி செய்தனர். அங்கு 2 மணி நேரம் கைப்பந்து விளையாடி முடித்த பிறகே அவர்களிடம் மீண்டும் செல்போன் வழங்கப்பட்டது.
போலீசாரின் இந்த நூதன நடவடிக்கையை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர். சமூக வலைத்தளங்களிலும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Related Tags :
Next Story