மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த பெட்ரோல் பங்க் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி ரைட்டர் தெருவை சேர்ந்தவர் நூரூதீன் (வயது 52). பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஹசினா பேகம் (42). இவர்களுக்கு அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி மகன் அல்தாப் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் தனது தாய்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது வீட்டில் ஹசினா பேகம் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து ஹசினா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் நூருதீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நூருதீன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வேலைக்கு செல்வதற்கு முன்பு மனைவியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு செல்வதும், அடிக்கடி வீட்டிற்கு வந்து சோதனை செய்வதுமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று மகன் வேலைக்கு சென்றவுடன் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நூருதீன் அவரது மனைவி ஹசினா பேகத்தை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர், உறவினர்களின் வீடுகளில் தங்கி தலைமறைவாக இருந்துள்ளார். அதனை கண்டறிந்த போலீசார், நூருதீனிடம் லாவகமாக பேசி வரவழைத்து கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story