தேங்கி நிற்கும் மழை நீரில் ரம்மியமாக காட்சி அளிக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவில்
தேங்கி நிற்கும் மழைநீரில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில் உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த படகு துறை அகழி மற்றும் முன்புற பகுதியில் உள்ள அகழி போன்றவற்றில் மழை நீர் தேங்கி கடற்கரை கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
சுற்றுலா பயணிகள் மழைக் காலங்களில் இங்கு வரும் போது இந்த காட்சியை ரசித்து படம் பிடிப்பது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடற்கரை கோவில் மூடப்பட்டுள்ளதால் இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பி நிலையில் மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். மழை, புயல் ஓய்ந்த நிலையிலும் நேற்றும் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் கடலில் சீற்றம் அதிகம் உள்ளது என தெரிந்தும் அலட்சியமாக கடலில் குளித்து கொண்டிருந்தனர்.
போலீசார் பலமுறை அவர்களை எச்சரித்தும் யாரும் அதனை பொருட்படுத்தாமல் கடலில் குளித்து கொண்டிருப்பதையும், அலைகள் வரும் போது செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்ததையும் காண முடிந்தது. மேலும் தற்போது மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம் போலீசார் கடலோர காவல் படை போலீசாருடன் இணைந்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மீனவர் பகுதியை சேர்ந்த நீச்சல் வீரர்கள் சிலரும் கடலில் மூழ்குபவர்களை காப்பாற்ற அங்கு கண்காணிப்பு பணியில் இருக்க காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story