டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்


டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2020 7:33 AM IST (Updated: 29 Nov 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசாரை துண்டிவிட்டு தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை கைவிட வலியுறுத்தியும் திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வரதராஜன், மாவட்ட தலைவர் சுப்பையன், நிர்வாகிகள் அகஸ்டின், பாலமுருகன், செந்தில், செல்லமணி, ம.தி.மு..க. கொள்கை பரப்பு துணை செயலாளர் சீனுவாசன் மற்றும் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு புதிய வேளாண் சட்ட நகலை எரித்து கோஷங்கள் எழுப்பினர்.

பேட்டி

பின்னர் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனாவால் முடங்கி இருந்த நிலையில் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் இந்திய விவசாயிகளை அழிக்கும். இதனால் வருகிற ஆண்டு முதல் தமிழகத்தில் நெல் கொள்முதலை அரசு கைவிடும் நிலை ஏற்படும்.

டெல்லியில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளை அழிக்கும் வேளாண் சட்டங்களை கைவிட வலியுறுத்தியும் வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும்.

பேச்சுவார்த்தை

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை வருகிற 3-ந் தேதி அழைத்து மத்திய வேளாண் மந்திரி பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மறுக்கும்பட்சத்தில் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story