திருச்செங்கோட்டில் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது


திருச்செங்கோட்டில் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2020 4:40 AM GMT (Updated: 29 Nov 2020 4:40 AM GMT)

திருச்செங்கோட்டில் நக்கைடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு பெரியபாவடி தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 9-ந் தேதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று பேசி கொண்டிருப்பதாக திருச்செங்கோடு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.

சிறையில் பழக்கம்

அப்போது ஆட்டையாம்பட்டி அருகே பெரும்படை காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ரப்பர் ஜெயபிரகாஷ் (வயது 24), சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (32), மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாங்குடி அடுத்த அம்பலதடி பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் திருச்செங்கோடு நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், சிறையில் ஏற்பட்ட பழக்கத்தில் ரப்பர் ஜெயப்பிரகாஷ் மற்ற இருவரையும் அழைத்து வந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 1 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story