சேலத்தில் போலியாக காசோலை தயாரித்து மோசடி செய்ய முயற்சி 2 பேர் கைது


சேலத்தில் போலியாக காசோலை தயாரித்து மோசடி செய்ய முயற்சி 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2020 4:55 AM GMT (Updated: 29 Nov 2020 4:55 AM GMT)

சேலத்தில் போலியாக காசோலை தயாரித்து மோசடி செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு சிமெண்டு கடையில் மேலாளராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். இவர் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், எங்களுடைய வாடிக்கையாளர் ஒருவர் ரூ.9 ஆயிரத்து 337-க்கு காசோலை கொடுத்தார். இதை நாங்கள் தனியார் வங்கியில் செலுத்தி அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டோம். ஆனால் அதே காசோலையின் எண்ணை பயன்படுத்தி வங்கியில் மீண்டும் வேறு ஒருவர் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 370 மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துமாறு அந்த காசோலை தபால் மூலம் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

2 பேர் கைது

இதில் களரம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவரான மணிகண்டன் (வயது 39), அவருடைய நண்பரான எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (40) ஆகியோர் அந்த பெண்ணிடம் நைசாகி பேசி வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு ஆகியவை பெற்று கொண்டு காசோலையை அனுப்பியது தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த காசோலையை போலியாக தயாரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மணிகண்டன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போலி காசோலை மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story