கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு


கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு
x
தினத்தந்தி 29 Nov 2020 6:21 AM GMT (Updated: 29 Nov 2020 6:21 AM GMT)

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

பழனி,

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 23-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பிறகு சண்முகார்ச்சனையை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை தொடங்கியது.

இதையடுத்து யாகசாலையில் இருந்து பரணி தீபம் எடுத்து மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் மூலவர் முன்பு பரணி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடந்தது.

சொக்கப்பனை

இந்தநிலையில் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருக்கார்த்திகையையொட்டி மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் நான்கு திசைகளில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து அங்கு சொக்கப்பனை கொளுத்தப்படும். அதன்பின்னர் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. இதற் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

கொரோனா பரவல் எதிரொலியாக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்ச்சிகளை கோவில் இணையதள பக்கத்தில் பக்தர்கள் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி www.pa-l-a-n-i-mu-ru-g-a-nt-e-m-p-le.org என்ற வலைத்தளத்திலும், முகநூல், யூடியூப்பிலும் பக்தர்கள் பார்க்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story