கொடைக்கானலில் போக்குவரத்து துண்டிப்பு: மலைப்பாதையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை


கொடைக்கானலில் போக்குவரத்து துண்டிப்பு: மலைப்பாதையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை
x
தினத்தந்தி 29 Nov 2020 6:29 AM GMT (Updated: 29 Nov 2020 6:29 AM GMT)

கொடைக்கானல் மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் நகரில் சாரல் மழை பெய்தது. ஆனால் புறநகர் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.

இதன் எதிரொலியாக, கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில், கோம்பைக்காடு என்ற இடத்தின் அருகே நேற்று காலை 10 மணி அளவில் ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்தது. மேலும் மலைப்பாதையோரத்தில் இருந்த மரங்களும் சாய்ந்து சாலையின் குறுக்காக விழுந்தன. இதனால் கொடைக்கானல்- பழனி மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

இதன் காரணமாக, மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் மலைப்பாதையை கடந்து செல்ல முடியாமல் காத்து கிடந்தன.

இதற்கிடையே பாறை, மரங்கள் சாலையில் விழுந்தது குறித்து தகவலறிந்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று சாலையின் குறுக்காக கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர். பின்னர் அந்த வழியாக, இலகுரக வாகனங் கள் மட்டும் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

ஆனால் ராட்சத பாறை அகற்றப்படாததால் கனரக வாகனங்கள் மலைப்பாதையில் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த வாகனங்கள் வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பாச்சலூர் வழியாக திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு பாறையை உடைத்து பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த பகுதியில்போக்குவரத்து சீரானது.

Next Story