கால்வாய்கள், ஏரிகளை சரிவர தூர்வாரவில்லை மோர்தானா அணையை பார்வையிட்ட துரைமுருகன் குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டத்தில் கால்வாய்கள், ஏரிகள் சரிவர தூர்வாரப்படவில்லை என மோர்தானா அணையை பார்வையிட்ட தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ.குற்றம் சாட்டினார்.
குடியாத்தம்,
தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை பகுதியை நேற்று மதியம் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மோர்தானா அணைக்கு தண்ணீர் வரும்போது இடதுபுற கால்வாயில் தண்ணீர் திறந்தால் பாக்கம், சென்றாம்பல்லி, தேவரிஷி குப்பம், காங்குப்பம், மேல்மாயில், லத்தேரி, அன்னங்குடி வரையிலும் செல்லும், அணையில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும்போதே கால்வாய்களில் தண்ணீர் திறந்திருந்தால் கிராமப்புறங்களில் நீர்வள ஆதாரம் உயர்ந்திருக்கும். ஆனால் தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரும்போது திறந்து விட்டுள்ளனர். மேல்மாயில் வரை கூட இந்த தண்ணீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல் வலதுபுற கால்வாயில் முன்னதாகவே தண்ணீர் திறந்திருந்தால் வேலூர் ஓட்டேரி வரை தண்ணீர் சென்றிருக்கும், வேலூருக்கு தண்ணீர் பிரச்சினை தீர்ந்து இருக்கும்.
கால்வாய் மற்றும் ஏரிகள் தூர்வாரப்படுவதாக தமிழக முதல்வர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால் கால்வாய், ஏரி தூர் வாருவது குறித்து அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டமே நடத்தினார். மழைக்காலம் வருவதற்கு முன்னதாகவே எங்கள் ஆட்சியில் கால்வாய்கள் சீர் செய்யப்படும், பழுதான இடத்தில் உடனடியாக சீர் செய்வோம். அதனால் கால்வாய்களில் தண்ணீர் கடைமடை வரை செல்லும்.
ஆனால் சரியானபடி கால்வாய்கள் மற்றும் ஏரிகளை தூர்வார வில்லை. மோர்தானா அணைக்கு வரும் பாதைகள் மிகவும் மோசமாக உள்ளது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது, வரும் வழியில் உள்ள பொதுமக்கள் பாதைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர். நான்கு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளேன்.
அதிகாரிகள் தூங்கினாலும் அமைச்சர்கள் தூங்கக்கூடாது. காரணம் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மிகவும் முக்கியமான துறைகளாகும். அந்த துறைகளை தமிழக முதல்-அமைச்சரே வைத்துள்ளார். மேலும் பல துறைகள் அவரிடமே உள்ளதால் இங்கே உள்ள பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து தமிழக கவர்னர் மவுனம் காப்பது இரக்கம் இல்லாத செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், குடியாத்தம் ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர் ரவி, கிருஷ்ணமூர்த்தி, நகர பொறுப்பாளர் சவுந்தர்ராஜன், கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சீதாராமன், பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் பொகளூர் ஜனார்த்தனம், நகர செயலாளர் ஜுபேர்அஹமத், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் பாபு உள்பட பலர் உடன்இருந்தனர்.
Related Tags :
Next Story