பாலாற்றில் வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் கயிறு கட்டி மீட்பு - தீயணைப்பு படை 7 மணி நேரம் போராட்டம்


பாலாற்றில் வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் கயிறு கட்டி மீட்பு - தீயணைப்பு படை 7 மணி நேரம் போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2020 4:00 PM IST (Updated: 29 Nov 2020 4:01 PM IST)
t-max-icont-min-icon

பாலாற்றில் வெள்ளத்தில் சிக்கிய வாலிபரை தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் போராடி கயிறு கட்டி மீட்டனர்.

காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கத்தை அடுத்த வேகாமங்களம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 58). இவரது மகன் சந்திரகாந்த் (24) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 2 மாடுகளை பாலாற்றை ஒட்டியுள்ள பகுதியில் மேய்சலுக்காக கட்டி விட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டு விடக்கூடாதே என ஓடிச்சென்று மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளார். இதில் மாடுகள் இரண்டும் கரைக்கு வந்து வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால் சந்திரகாந்த் பாலாற்றில் சிக்கிக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பாலாற்றில் சென்று பார்த்தபோது தண்ணீருக்கு நடுவே, பாறை மீது நின்று கொண்டு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆய்வாளர் ராமசந்திராவோலா தலைமையில் 19-பேர் கொண்ட குழுவினர் வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் அரக்கோணம், ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கயிறு மூலம் வாலிபரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுமார் 7 மணி நேரம் கழித்து வாலிபரை பத்திரமாக மீட்டனர்.

மேலும் இதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (40) என்பவர் தமக்கு சொந்தமான கன்றுடன் 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி போய் பார்த்தபோது மாடு தன் கண்முன்னே பாலாற்றில் அடித்து செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பாலாற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக இந்த இரண்டு சம்பவங்களும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story