பனிமலை போல் உருவான விஷ நுரை: 3 மணி நேர மழைக்கு தாங்காத மதுரை - வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்


பனிமலை போல் உருவான விஷ நுரை: 3 மணி நேர மழைக்கு தாங்காத மதுரை - வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்
x
தினத்தந்தி 29 Nov 2020 7:30 PM IST (Updated: 29 Nov 2020 7:26 PM IST)
t-max-icont-min-icon

3 மணி நேர மழைக்கு கூட மதுரை தாங்காமல் போனது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. பனிமலை போல் விஷ நுரை உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நேற்று வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதேவேளையில் மாநகரின் பள்ளமான இடங்களில் எல்லாம் மழை நீர் குளம் போல் தேங்கியது. குறிப்பாக விளாங்குடி வாய்க்கால் மற்றும் பந்தல்குடி வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது. விளாங்குடி கண்மாய் நிரம்பியதால் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் விளாங்குடி வாய்க்கால் வழியாக செல்லூர் கண்மாயை சென்றடைகிறது.

ஆனால் இந்த வாய்க்காலை தூர்வாரததால், தண்ணீர் வெளியேறி கரிசல் குளம், திருமால் நகர், அஞ்சல் நகர், பாண்டியன் நகர், சொக்கலிங்க நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதிகள் குளம் போல் ஆகின. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அதனால் மக்கள் செய்வதறியாது தவித்தனர். சிலர் வீடுகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதே போல் செல்லூர் கண்மாயில் இருந்து வெளியேறும் நீர் பந்தல்குடி வாய்க்கால் வழியாக வைகை ஆற்றுக்கு செல்கிறது. பந்தல்குடி வாய்க்காலும் சரிவர தூர்வாரததால் அந்த வாய்க்கால் நீரும் நரிமேடு சுற்றுப்புற பகுதிகளில் வெளியேறியது. அதனால் அந்த பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து நின்றது. சாலை முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அங்கும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனவே அந்த பகுதி மக்களும் வீட்டிற்குள் முடங்கினர்.

இதற்கிடையில் மிகப்பெரும் பிரச்சினையாக செல்லூர் கண்மாயில் விஷ நுரை தேங்கி நின்றது. அந்த நுரை பந்தல்குடி வாய்க்கால் வழியாக வெளியேறி சாலைகளிலும் பரவியது. பனி மலை போல் சாலைகளில் விஷ நுரை தேங்கி அழகாக காட்சியளித்தது. தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விஷ நுரையை அப்புறப்படுத்தினர். மேலும் அந்த நுரை வைகை ஆற்றில் கலந்ததால் ஆற்றிலும் விஷ நுரை தேங்கியது.

மழை நீர் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழை நீர் தேங்கிய பகுதிகளில் வேட்டியை மடித்து கட்டி கொண்டு இறங்கி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அந்த பகுதியில் இருந்த ஒரு ரேஷன் கடையில் தண்ணீர் சூழ்ந்து நின்றது. உடனடியாக அந்த கடையில் இருந்த பொருட்களை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். உடனடியாக அங்கிருந்த பொருட்கள் லாரி மூலம் வேறு கடைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதே போல் செல்லூர் கண்மாயில் தேங்கிய விஷ நுரை மற்றும் பந்தல்குடி வாய்க்கால் மூலம் ஏற்பட்ட மழை பாதிப்புகளை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மழை நீர் வடிவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனடியாக பந்தல்குடி வாய்க்கால்களில் இருந்த அடைப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் மழை நீர் வேகமாக வடிந்தோடியது.

மழை காரணமாக வைகை ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோரிப்பாளையம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. அதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதி மற்றும் ஓபுளாபடித்துறை பகுதியில் சூழ்ந்து இருந்த ஆகாய தாமரை செடிகளை எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அதனால் வைகை ஆற்றில் தண்ணீர் தடையின்றி செல்ல தொடங்கியது.

நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மதுரையில் வெள்ள எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் வைகை ஆறு முழுவதும் ஆக்கிரமித்து இருந்த ஆகாய தாமரை செடிகளை கூட அகற்றவில்லை. மழை பெய்து தண்ணீர் வந்தவுடன்தான் ஆகாய தாமரைகளையும், வாய்க்கால்களையும் தூர்வாரினர். 3 மணி நேர மழைக்கே மதுரை தாங்கவில்லை. பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகள் சேதம் அடைந்து விட்டன. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் கூட நேற்று காலையில் வடிந்து விட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து இருந்தால் மதுரையின் நிலைமை மோசமாகி இருக்கும். எனவே அதிகாரிகள் அடுத்த மழை வரும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

Next Story