‘தாயை தவறாக பேசியதால் நண்பரை தீர்த்து கட்டினேன்’ - கைதான வாலிபர் வாக்குமூலம்


‘தாயை தவறாக பேசியதால் நண்பரை தீர்த்து கட்டினேன்’ - கைதான வாலிபர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 29 Nov 2020 8:30 PM IST (Updated: 29 Nov 2020 8:25 PM IST)
t-max-icont-min-icon

தாயாரை தவறாக பேசியதால் எனது நண்பரை தீர்த்துக்கட்டினேன் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

திருப்பூர், 

தூத்துக்குடியை சேர்ந்தவர் இசக்கி (வயது 27) . திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

அவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சங்கர் (30) . இவரும் இசக்கியுடன் தங்கியிருந்தார். இவர்கள் 2 பேரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பூட்டியிருந்த, இவர்கள் குடியிருந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. சம்பவம் பற்றி அறிந்ததும் வடக்கு போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த சிமெண்ட் தொட்டிக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. மிகவும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

பின்னர் தடயவியல்நிபுணர்கள் வந்து விசாரணை நடத்தினார்கள். அதன் பின்னர் இறந்தது இசக்கி என்பது தெரியவந்தது. அவருடைய தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இசக்கி உடன் தங்கியிருந்த சங்கரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் ஒரு குற்ற வழக்கில் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பின்னர் சங்கரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் சங்கர் போலீசில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அது குறித்து போலீசார் கூறியதாவது-

கடந்த மாதம் 5-ந் தேதி வீட்டில் இருந்தபோது இசக்கிக்கும், சங்கருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சங்கரின் தாயாரைப் பற்றி இசக்கி தவறாக பேசியுள்ளார். இதில் சங்கர் கல்லை தூக்கி இசக்கியின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் வைத்துள்ளார். கொலை செய்து 8 நாட்களாக பிணத்துடன் சங்கர் அதே அறையில் இருந்துள்ளார்.

12-ந் தேதிக்கு பிறகு வீட்டை பூட்டிவிட்டு அவர் மாயமாகினார். அதன் பிறகு 15 நாட்கள் கழித்து கடும் துர்நாற்றம் வீசிய பிறகே போலீசுக்கு தெரியவந்துள்ளது. சங்கர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு இருந்துள்ளது. மூன்றாவதாக இசக்கியை கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து சங்கரை வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story