மருதமலை கோவில் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து; 3 பக்தர்கள் காயம்
மருதமலை கோவில் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
வடவள்ளி,
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் குடும்பத்துடன் நேற்று அதிகாலை கோவையை அடுத்த வடவள்ளியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காரில் வந்தார். பின்னர் காரிலேயே மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மலை அடிவாரத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை குமார் ஓட்டினார்.
அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர்.
இதனைக்கண்ட அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே போலீசார் அங்கிருந்தவர்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் குமாரின் மனைவி சந்திரா, இவரது உறவினர்கள் தனபாக்கியம், உதயகுமார் பிரபாவதி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், மருதமலை மலைப்பாதையில் இதே இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்பு சுவரில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்ட இடம் சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளதால், மலைப்பாதையில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பு சுவர் உடைந்து கிடக்கிறது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து நடந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கவும், தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story