திருமணம் செய்வதாக இளம்பெண்களிடம் பண மோசடி: நைஜீரிய வாலிபரின் மனைவி உள்பட மேலும் 5 பேர் கைது


திருமணம் செய்வதாக இளம்பெண்களிடம் பண மோசடி: நைஜீரிய வாலிபரின் மனைவி உள்பட மேலும் 5 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2020 11:40 PM GMT (Updated: 29 Nov 2020 11:40 PM GMT)

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் நைஜீரிய வாலிபரின் மனைவி உள்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு, 

நைஜீரியாவை சேர்ந்தவர் பிரைட்(வயது 25). இவர் திருமண இணையதளம் மூலம் இளம்பெண்களிடம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பணம் வாங்கி மோசடி செய்து வந்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பெங்களூரு ஒயிட்பீல்டுவை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிரைட், அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.24 லட்சம் வாங்கி கொண்டு தலைமறைவானார்.

இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் ஒயிட்பீல்டு சி.இ.என். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரைட்டை டெல்லி அருகே உத்தம்நகரில் வைத்து கைது செய்தனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது பிரைட்டுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அவர் தனது மனைவி டிவைன் முடகசி, உறவினர்கள் இமானுவேல் வசமா, ஜான் அலெக்ஸ், ஈஜூஜூ முடகசி, மரியா இமானுவேல் ஆகியோருடன் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் திருமண இணையதளம் மூலம் மாப்பிள்ளை தேடும் இளம்பெண்களை குறிவைத்து அவர்களிடம் இருந்து பணம் மோசடி செய்ய பிரைட், டிவைன் உள்பட 6 பேரும் முடிவு செய்து உள்ளனர். அதன்படி திருமண இணையதளத்தில் மாப்பிள்ளை தேடும் பெண்களை தொடர்பு கொண்டு பிரைட் பேசுவார். அப்போது உங்களை எனக்கு பிடித்து உள்ளது. நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசைவார்த்தைகள் கூறுவார்.

இதனை நம்பும் இளம்பெண்களிடம் பல்வேறு பிரச்சினைகளை கூறி தனக்கு பணம் தேவைப்படுவதாக பிரைட் கூறுவார். பின்னர் இளம்பெண்கள் பணம் அனுப்பியதும் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிரைட் தலைமறைவாகி விடுவார். இதையே பிரைட் தொழிலாக வைத்து செயல்பட்டு உள்ளார். இதற்காக அவருக்கு மனைவி உள்பட மற்றவர்களும் உதவி செய்து உள்ளனர்.

கைதான பிரைட் கொடுத்த தகவலின்பேரில் அவரது மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 4 மடிக்கணினிகள், 10 செல்போன்கள், 58 வங்கிக்கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story