வீட்டு வாசலில் நின்ற அரசு அதிகாரிக்கு அரிவாள் வெட்டு; மனைவியிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு தப்பி ஓடிய மர்ம கும்பல் அடையாளம் தெரிந்தது
லாஸ்பேட்டையில் வீட்டு வாசலில் நின்ற அரசு அதிகாரியை அரிவாளால் வெட்டி, அவரது மனைவி அணிந்திருந்த 15 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். தப்பி ஓடிய மர்ம கும்பல் அடையாளம் தெரிந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி லாஸ்பேட்டை தில்லை கண்ணம்மாள் நகர் பிரசாந்தி வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). துணை பதிவாளரான இவர் புதுவை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவி லதாவுடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். ரவிச்சந்திரன் வீட்டின் முன்பு வந்து வண்டியை நிறுத்தியவுடன் அவரது மனைவி மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினார்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் வண்டியை விட்டு இறங்கி ரவிச்சந்திரனின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி அவரது மனைவியின் கழுத்தில் கிடந்த நகைகளை கழற்றி தரும்படி மிரட்டினான். இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் கூச்சலிட்டார். உடனே மர்ம நபர் அவரது மனைவியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்தான்.
இதனை பார்த்த ரவிச்சந்திரன் தடுக்க முயற்சி செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர் அவரது கையில் அரிவாளால் வெட்டி விட்டு 15 பவுன் தங்க சங்கிலி யுடன் மோட்டார் சைக்கிளில் கூட்டாளிகளுடன் தப்பி ஓடி விட்டான். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ரவிச்சந்திரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் இது குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் யார் என்பது அடையாளம் தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் நடந்த மற்றொரு சங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளே இந்த சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டை பகுதியில் இதே போல் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை மர்ம கும்பல் பின்தொடர்ந்து சென்று இருளான பகுதியில் அவர்கள் செல்லும்போது வண்டியை வழிமறித்து கத்தியை காட்டி நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஒரே நாளில் 2 தம்பதிகளை தனித்தனியாக வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து சென்றனர்.
அந்த பகுதியில் அடிக்கடி இது போல் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story