குமாரபாளையம் தாலுகாவில் 14,196 பேருக்கு முதியோர் உதவித்தொகை அமைச்சர் தங்கமணி தகவல்


குமாரபாளையம் தாலுகாவில் 14,196 பேருக்கு முதியோர் உதவித்தொகை அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2020 3:16 AM GMT (Updated: 30 Nov 2020 3:16 AM GMT)

குமாரபாளையம் தாலுகாவில் 14,196 பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 3-வது வார்டு பகுதியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, குடிநீர் வசதி, சிமெண்டு சாலை அமைத்தல், தொழிற்கடன், ஆவின் பாலகம் அமைத்தல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடமிருந்து பெற்ற மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 15 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

14,196 பேருக்கு முதியோர் உதவித்தொகை

குமாரபாளையம் தாலுகாவில் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் 14,196 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 7,420 பேருக்கு விதவை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட நபர்கள் யாராவது இருந்தால் உடனடியாக விண்ணப்பம் செய்து பெற்று கொள்ளலாம். தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குமராபாளையம் நகராட்சி 3-வது வார்டு பெரந்தார்காடு பகுதியை சேர்ந்த விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெயிண்டர் ரமேஷ் அமைச்சர் தங்கமணியிடம் மனு அளித்ததன், அடிப்படையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான அதிநவீன வசதிகளுடன் கூடிய பேட்டரியினால் இயங்கும் மின்மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வழங்கப்பட்டு உள்ளது. அவர் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இதில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணையத்தின் இயக்குனர் நாகராஜன் அரசு வக்கீல் சந்திரசேகர், தாசில்தார் தங்கம், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, பொறியாளர் சுகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story