வட்டமலைகரை ஓடை அணை நீர்வழிப்பாதையில் 10,008 அகல்விளக்குகளை ஏற்றிய கிராம மக்கள்


வட்டமலைகரை ஓடை அணை நீர்வழிப்பாதையில் 10,008 அகல்விளக்குகளை ஏற்றிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 30 Nov 2020 9:38 AM IST (Updated: 30 Nov 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

வட்டமலை கரை ஓடை அணைக்கு பாசனத்துக்கு தண்ணீர் கொண்டுவர வலியுறுத்தி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம மக்கள் சார்பில் அணை நீர்வழிப்பாதையில் 10 ஆயிரத்து 8 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றினர்.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணையில் இருந்து வரும் உபரி நீரை பாசனத்துக்காக வட்டமலை கரை ஓடை அணைக்கு கொண்டுவர விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருக்கார்த்திகை தினமான நேற்று மாலையில் வட்டமலை கரை ஓடை அணை நீர்வழிப்பாதையில் 10 ஆயிரத்து 8 அகல்விளக்கில் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.

இதுகுறித்து வட்டமலை கரை ஓடை நீர் தேக்க பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

10,008 தீபம்

இந்த அணை 1974-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1980-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 650 ஏக்கர் பரப்பளவில் 508 ஏக்கரில் நீர் நிற்கக்கூடிய அளவில் 25 அடி உயரத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் 1980, 1981, 1982 ஆகிய 3 ஆண்டுகளில் மழைநீரால் அணை நிரம்பியது. அதற்குப்பின்னர் 1999, 2001-ம் ஆண்டுகளில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்காலில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. அதற்கு பின்னர் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்த அணையில் நீர் நிரப்பினால் உத்தமபாளையம், நாகமநாயக்கம்பட்டி, கஸ்தூரி பாளையம், முளையம் பூண்டி, புதுப்பை, வேலப்பநாயக்கன் வலசு, மயில்ரங்கம் ஆகிய கிராம பகுதிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 43 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த அணைக்கு திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணையில் இருந்து வரும் உபரி நீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை. அதனால் அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக கார்த்திகை தீப திருநாளையொட்டி வட்டமலை கரை ஓடை அணை நீர் வழிப்பாதையில் மொத்தம் 10 ஆயிரத்து 8 தீபங்களை ஏற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story