திருக்கார்த்திகையையொட்டி 2,500 அடி உயர பிரான்மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது


திருக்கார்த்திகையையொட்டி 2,500 அடி உயர பிரான்மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 30 Nov 2020 4:51 AM GMT (Updated: 30 Nov 2020 4:51 AM GMT)

திருக்கார்த்திகையையொட்டி 2,500 அடி உயர பிரான்மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. வீடுகளில் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.

எஸ்.புதூர்,

தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது ஒளி வடிவில் இறைவனை கொண்டாடும் விழா. இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில் பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக்காம்புகள் நார் எடுக்க, பழங்கள் (நுங்கு) உணவாக, பனைமரத்தின் பாளையை வெட்டினால் பதநீர் இப்படி பனையின் அனைத்து பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதை பூலோக கற்பகவிருட்சம் என்று அழைப்பர்.

திருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து கோவில் முன் வெட்ட வெளியில் நட்டு, அதனைசுற்றி பனை ஓலைகளை பிணைத்துக் கட்டி உயரமான கூம்பு போன்ற அமைப்பினை உருவாக்குவார்கள் இதையே சொக்கப்பனை என்று அழைக்கின்றனர். ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். மேலும் இந்த தினத்தில் சிறுவர்கள் பனை மர பூக்களை காய வைத்து, எரித்து, கரியான பின்பு அதனை கொண்டு பொறிவானம் தயாரித்து அதனை பனை மட்டையில் கட்டி தீப்பொறிகளை உருவாக்கி விளையாடி மகிழ்வர். திருவண்ணாமலை உள்ளிட்ட தலங்களில் மகா தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

பிரான்மலை

அதுபோல் பிரான்மலையிலும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிங்கம்புணரி அருகே உள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் பிரான்மலையில் பாதாளம், மத்தியம், பூலோகம் என மூன்று நிலைகளில் சிவன் கோவில்கள் உள்ளன. தரை தளமான பாதாளத்தில் திருக்கொடுங்குன்றநாதசாமி, மத்தியத்தில் பைரவர், பூலோகத்தில் மங்கை பாகர் தேனம்மை கோவில் உள்ளன. பாதாளத்தில் இருந்து பூலோகத்தில் சுமார் 250 அடி உயரத்தில் உள்ள மங்கை பாகர் தேனம்மை கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோவில் தலைமை குருக்கள் உமாபதி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தினர். அதனை தொடர்ந்து பைரவருக்கும், கொடுங்குன்ற நாதசாமிக்கும் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுமார் 2500 அடி உயரம் கொண்ட பிரான்மலையில் கார்த்திகை திருநாளையொட்டி மகா தீபம் ஏற்பட்டது. முன்னதாக பெரிய கொப்பரையில் 100 லிட்டர் எண்ணெய் ஊற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்குட்பட்ட சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேற்று மாலை சுவாமி ஸ்ரீசேவுகப்பெருமாள் அய்யனாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் சேவற்கொடி சிவாச்சாரியார் கோவிலுக்கு வெளியே அமைத்துள்ள பனை ஓலைகளால் ஆன சொக்கப்பனையில் தீபத்தை வைத்து வழிபாடு செய்தனர். அதைத்தொடர்ந்து பனை ஓலைகளால் ஆன சொக்கப்பனை தீயிட்டு எரிக்கப்பட்டது.

சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

எஸ்.புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செட்டிகுறிச்சி செல்வ விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதே போல் புழுதிபட்டி பாலதண்டாயுதபாணி கோவில், வில்லி விநாயகர் கோவில், தர்மபட்டி பிள்ளையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பல கோவில்களில் சொக்கப்பனைகள் கொளுத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர். சொக்கப்பனை கொழுந்து விட்டு எரிந்த போது உருவான ஜோதியை சிவமாக கருதி வழிபட்டனர்.

சொக்கப்பனை எரிந்த பிறகு அதில் இருந்து விழுந்த கரி துண்டுகள், சாம்பலை எடுத்து விவசாய நிலங்களில் தூவினால் விவசாயம் பல மடங்கு பெருகும் என்ற ஐதீகம் இப்பகுதியில் உண்டு. இதனால் சொக்கப்பனை எரிந்த பிறகு அதில் இருந்து விழுந்த கரிதுண்டுகள், சாம்பலை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று திருக்கார்த்திகை தினம் என்பதால் எஸ்.புதூர் பகுதிகளில் வீடுகளில் பெண்கள் அகல் தீபம் ஏற்றி வழிபட்டனர். வீட்டு வாசல்படிகளிலும், மொட்டை மாடிகளிலும் அகல் தீபம் ஏற்றினார்கள்.

Next Story