கால்வாயில் தண்ணீர் திறக்க முயன்றதை தடுத்த அதிகாரிகளை கண்டித்து நந்தகுமார் எம்.எல்.ஏ.தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியல்


நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்த போது எடுத்த படம்.
x
நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 1 Dec 2020 12:50 AM IST (Updated: 1 Dec 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஏரிக்கால்வாயில் தண்ணீர் திறந்து விட முயன்றதை அதிகாரிகள் தடுத்ததால் அதனை கண்டித்து நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்ணீர் திறக்க சென்றார்
வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோர்தானா அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும் பாலாற்றில் கலப்பதால், ஏரிகளுக்கு செல்லவேண்டிய நீர் வீணாக போகிறது என்று நந்தகுமார் எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பள்ளிகொண்டா பாலாற்றில் இருந்து தொடங்கும் மோர்தானா கால்வாயில் தண்ணீர் திறப்பதற்காக தி.மு.க. நிர்வாகிகளுடன் நந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று அந்தப் பகுதிக்கு சென்றார். அப்போது மோர்தானா கால்வாயில் தண்ணீர் செல்வதை கண்ட அவர் கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கு முயன்றார்.

சாலைமறியல்
இதைப்பார்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பணியை நாங்கள் செய்கிறோம் என்று கூறி அவரை தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ. மற்றும் ஆதரவாளர்கள் பாலாற்று பாலம் அருகே குடியாத்தம் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், அணைக்கட்டு தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பருவ மழைக்கு முன்பே ஏரி கால்வாய்கள் தூர்வார ப்படாததால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. ஏரி கால்வாய்களில் தண்ணீர் சென்றிருந்தால் இறைவன்காடு, ஒக்னாபுரம், செதுவாலை, விரிஞ்சிபுரம், சதுப்பேரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியிருக்க வாய்ப்புள்ளது என்று நந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

வாக்குவாதம்
அதற்கு உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் தற்போது பாதி அளவுக்கு நிரம்பியிருக்கிறது, அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு உள்ளது என்று கூறினார். இதனால் அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பரபரப்பான சூழ்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர் எம்.எல்.ஏ.வை சமாதானம் செய்தனர். தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோர்தானா கால்வாயின் முகப்பு பகுதியில் உள்ள மேடுகளை அகற்றி, ஏரி கால்வாயில் தண்ணீர் திருப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு
இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story