மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீசாரின் செயல்பாடுகளில் மாற்றம்; முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?


மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீசாரின் செயல்பாடுகளில் மாற்றம்; முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 1 Dec 2020 3:11 AM IST (Updated: 1 Dec 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் போலீஸ் நிலைய செயல்பாடுகள் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் முழுமையாக இருப்பதற்கு தனிப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பு தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரவு
தமிழக அரசு போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்களை எந்தவகையில் நடத்திட வேண்டும் என்பதற்கு பல்வேறு வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. மேலும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உரிய முறையில் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட புகார் மனு குறிப்பிட்ட போலீஸ் நிலைய விசாரணை எல்லையில் இல்லா விட்டாலும் புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக மாற்றம் செய்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாறுபாடு
ஆனால் நடைமுறையில் இந்த உத்தரவுக்கு மாறாக பெரும்பாலான போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. விசாரணை அதிகாரிகள் புகார் மனுக்களை பெற்றவுடன் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தாமல் வழக்குப் பதிவு செய்யும் நிலையிலேயே தாமதப்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. தாமதம் ஏற்படும் நிலையை உருவாக்குவது வாடிக்கையாகி உள்ளது.

மேலும் பல நிலைகளில் ஆதாயம் கருதி வழக்குகள் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்படும் நிலையும் இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். தனிப்பிரிவு போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பற்றி முன்கூட்டியே கண்டறிந்து அது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் போலீஸ் நிலையசெயல்பாடுகளை கண்காணித்து மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு தெரிவித்தும், மாறுபாடான நடவடிக்கைகள் போலீஸ் நிலையத்தில் இருந்தால் அது குறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.

போலீசார்
கடந்த காலங்களில் தனிப்பிரிவு போலீசில் போலீசார் நியமிப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. காரணம் தனிப் பிரிவு போலீசாரின் செயல்பாடுகள் குறிப்பிட்ட பகுதிகளில் சுமூக நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தவிர்க்கப்படவும், போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டியது என்பதற்காக தான்.

காலப்போக்கில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது கேள்விக்குறியே. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீசாரின் செயல்பாடுகள் நிர்வாகத்திற்கு எந்த அளவிற்கு உறுதுணையாக உள்ளது என்பதை ஆய்வு செய்து தனிப்பிரிவில் போலீசாரின் செயல்பாட்டினை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

Next Story